Wednesday, December 9, 2015

குருவாயுரப்பன் - மைந்தனைக்காக்கும் ஸ்தோத்திரம்


குருவாயுரப்பன் - மைந்தனைக்காக்கும் ஸ்தோத்திரம்

முன்னுரை


மைந்தனை காக்க குருவாயுரப்பனிடம் முறையிடும் இந்த ஸ்லோகமானது மலையாள பாஷையில் உள்ளது. இதன் மூலம் மற்றும் ஆசிரியர் குறித்து எந்த தகவல்களும் அறியப்படவில்லை. யாரேனும் அறிந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறோம். இந்த ஸ்லோகத்தை தமிழ் அறியும் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய ஸ்ரீ P.R. ராமச்சந்தர் அவர்கள் என்னிடம் இந்த கோரிக்கையை வைத்தார். குருவயுரப்பனின் அருளால் குருவாயூர் ஏகாதசி அன்று ஆரம்பித்து சில தினங்களில் எழுதி முடிக்கப்பட்டது. இந்த ஸ்லோகத்தை படிப்பதனால் கிடைக்கும் பலன் என்ன என்பதை ஆசிரியர் இறுதியில் கூறும்பொழுது

மகனைக் காக்குமிந்த ஸ்லோகத்தை
அனுதினம் பக்தியோடு படிப்போர்க்கு 
நற்குணங்கள் கூடிய சத்புத்திரன்
குருவாயுரப்பன் நிச்சயம் தந்தருள்வான் 

என்று முடிக்கிறார். ஆகையால் இதை பாராயணம் செய்வோர்க்கு சத்புத்திரன் அமைவதோடு அல்லாமல் குருவாயுரப்பனின் பரிபூர்ண அருள் மற்றும் க்ருபை கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

குருவாயுரப்பன் திருவடிகளே சரணம்
ஆனந்த் வாசுதேவன்
குர்கான் - 9/12/2015
anand.vasudevan1@gmail.com
குருவாயுரப்பன் - மைந்தனைக்காக்கும் ஸ்தோத்திரம்
உலகெலாம் போற்றிப் புகழ் பெருகும்
குருவாயுரப்பா ஜகன்னாதா மாதவா
தீனனான என்னை காத்தருள்வாயென்று
உன் பொற்பாதத்தில் வீழ்ந்து வணங்குகிறேன் (1)

நின் திருவடியின்  க்ருபை இருந்தால்
நடவாததும் நடந்தேறுமே பந்துவத்சலா
உன் கடைக்கண் பார்வையினால்
கஷ்டங்கள் யாவும் பறந்தோடுமே  (2)

பரிபூர்ண பக்தியுடன் பகவத்பாத சந்நிதியில்
பாலகனை நின் திருவடியில் சமர்ப்பித்தேன்
உறுதியாய் அவனை காப்பாற்றுவாயென்று
கருதி உன்னை வேண்டிக்கொள்கிறேன் (3)

உலகில் காணும் பொருள் எல்லாம்
உதரமதில் பேராசையுடன் நிறைக்கும்போது
பக்ஷிவாஹனா தன்வந்தரி பகவானே
ரக்ஷித்து காத்தருள் புரியவேணுமே  (4)

உற்சாஹமாய் நதியில் மைந்தன்
நீராடும்போது மத்ஸ்யரூப புருஷோத்தமா
வாத்சல்யத்தோடு அவனை நீயும்
காத்தருள வேண்டும் குருவாயுரப்பா  (5)


கர்ம சாக்ஷியாய் இருக்கும் ஜகன்நாயகா
கார்முகில் வர்ணா  காருண்ய வாரிதே
ஆழ்ந்த நித்திரையில் உறங்கும் மைந்தனை
கூர்ம விக்ரஹா  காத்திடல் வேண்டுமப்பா   (6)

கூடித்திரியும் சிறார்கள் பசுவனங்களில்
ஓடித்திரிந்து விளையாடும் பொழுது
வராஹரூபா அசுரர்குலம் மாய்ப்பவனே
நாடிவந்து அவர்களை ரக்ஷிக  வேணுமே         (7) 

பூத பிரேத பிசாசுகள் மூலமாய்
பீதியுடன் இவன் இரவில் துவளும்போது
மானுடம் காக்கும் ஹே நரசிம்ஹா
ப்ரீதியுடன் அபயம் நல்கிட வேண்டுமே            (8)
 
பகட்டு களிப்பு போன்ற அறியாமையுடன்  
வாலிபத்தை அவன் எட்டும் பொழுது
நேரும் அபத்தங்களில் இருந்தவனை
வாமன மூர்த்தியே காத்தருள வேண்டுமப்பா     (9)

பார்க சிஷ்ய தபோநிதே கேரள
சொர்க பூமிதனை தந்தவனே
பார்கவ பகவானே மைந்தனை
நல்வழி காட்டி ரக்ஷிக்க வேணுமப்பா  (10)

சத்ய தர்ம நெறிதனை வழுவி
நித்யமும் அதனில் வாழ்ந்து உய்ய
சத்யரூப ஹே ராமசந்திரா ராகவா
தசரதபுத்ரா அனுதினம் வணங்குகிறேன்    (11)

பலம் பொருந்திய கலப்பையை ஏந்தும்
பலராம மஹாவீரா நற்குண கடலே
பலபத்ர பகவானே என் மைந்தனுக்கு
பல நற்குணங்கள் நல்கிட வேண்டுமப்பா  (12)

நந்த நந்தனா பிருந்தாவன ப்ரியா
அருள் பொழியும் கருணைக் கடலே
நலமுடன் என் நந்தனை கனிந்து
இந்திராபதே பாலிக்க வேணுமப்பா     (13)

வாள்ஏந்தி தீயோரை அழிப்பவனே
கல்கிரூபா கலிமல நாசனா
சற்குரோ கமலதள லோசனா
மைந்தனை என்றும் காத்தருள்வாயே  (14)

பாற்கடலில் பாம்பணையில் 
கருணையுடன் துயிலும் பத்மநாபா
நாளுக்கு நாள் பெருகும் பேராசையை
ஒழித்தவனை ரக்ஷிக்க வேண்டுமப்பா  (15)
நூறாண்டு நல் ஆரோக்யமொடு      
தேஜஸுடன் உள்ளொளி பெற்று  
ஸ்ரேயஸ்ஸோடு இவன் வாழ
அருள்புரிய வேண்டும் குருவாயுரப்பா  (16)

வினயத்துடன் கூடிய ஞானமும்
அனைத்து சம்பத்துக்களும் அடைந்து
பகவத் பக்தியும் முக்தியும் இவனுக்கு 
மறைபோற்றும் நாயகா தந்தருள்வாய்  (17)

மைந்தனவன் வாலிபத்தை அடையும்போது
மாயையெனும் மோஹத்தில் சிக்காமல்
காக்கவேண்டி ஹே! கிருஷ்ணா! பாத பத்மமதில்
மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்குகிறேன்  (18)

விஸ்வநாத ஹே விராட புருஷா
படைத்தல் காத்தல் அழித்தல் என
முத்தொழில் புரியும் ஜகதீஸ்வரா    
உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்       (19)

மகனைக் காக்குமிந்த ஸ்லோகத்தை
அனுதினம் பக்தியோடு படிப்போர்க்கு  
நற்குணங்கள் கூடிய சத்புத்திரன்

குருவாயுரப்பன் நிச்சயம் தந்தருள்வான்      (20)

No comments: